×

கவர்னர், நிர்மலாதேவி குறித்து செய்தி வெளியிட்ட வழக்கில் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது: எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: கவர்னர் மற்றும் பேராசிரியை நிர்மலா தேவி குறித்து செய்தி வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முடியாது என்று எழும்பூர் நீதிமன்றம்  அதிரடியாக உத்தரவிட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி குறித்து கட்டுரை வெளிட்டதற்காக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் காவலை நீட்டிப்பு செய்வதற்காக நேற்று  மதியம் 1.30 மணியளவில் சென்னை, எழும்பூர் 13வது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில், வழக்கு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. நக்கீரன் கோபால் தரப்பில் ஆஜரான வக்கீல் பி.டி.பெருமாள் வாதிடுகையில், சட்ட பிரிவு 124ன் கீழ் வழக்கு பதியப்பட்டதில் எந்த  முகாந்திரமும் இல்லை. இந்த வழக்கு ஏப்ரல் மாதம் பதியப்பட்டது. இத்தனை நாள் கைது செய்யாமல், உள்நோக்கத்துடன் இன்று கைது செய்துள்ளனர். நக்கீரன் இதழில் வெளிவந்த கட்டுரை  நிர்மலா தேவி கூறிய விவகாரத்தை அடிப்படையாக வைத்துதான் வெளியிடப்பட்டுள்ளது. கவர்னர் மீது நேர்முகமாக எந்த குற்றமும் சுமத்தப்படவில்லை. அவரின் வேலைகளையும் நக்கீரன் கோபால் தடுக்கவில்லை. மேலும் அப்படி இந்த கட்டுரை வெளிவந்த பிறகு, கவர்னர்  எந்தெந்த வேலைகளை செய்யாமல் பாதிக்கப்பட்டார் என்பதையும் புகாரில் குறிப்பிடவில்லை. கோபால், கவர்னரை நேரடியாக சந்திக்கவுமில்லை, இருவருக்கும் கை சண்டையுமில்லை.  கவர்னர் தரப்பு குறித்து அந்த கட்டுரையில் எந்த தகவலும் எழுதப்படவில்லை. எனவே 124 சட்டபிரிவை, கட்டுரை வெளிட்ட விவகாரத்தில் பதிவு செய்ய முடியாது. இந்த பிரிவை பதிவு  செய்வதற்கான எந்த சரியான ஆதாரங்களும் அரசு அளிக்கவில்லை. எனவே முகாந்திரம் இல்லாமல் கைது செய்யக்கூடாது என்று பரபரப்பான வாதங்களை வைத்தார்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முருகன், இந்த வழக்கில், கவர்னரின் அதிகாரத்திற்கு இடையூறாக இருக்கும் வகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அவரை பணி செய்யவிடாமல் தடுத்துள்ளனர். எனவே பிரிவு 124ன் கீழ் வழக்கு பதிவு செய்தது சரிதான். எனவே சிறையில் அடைக்க வேண்டும் என்று வாதிட்டார். பின்னர், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கை சிறிது நேரம் ஒத்திவைத்தார்.பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து ராம், நான் வக்கீல் இல்லையென்றாலும் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் தன் கருத்தை கேட்குமாறு  நீதிபதியிடம் கோரிக்கை வைத்தார். இதனையேற்ற நீதிபதி, வாதிட அனுமதி வழங்கினார். அப்போது என்.ராம் வாதிடுகையில், ‘நக்கீரன் இதழில் வந்த கட்டுரைக்கும், அவர் மீது போடப்பட்டுள்ள தேசதுரோக சட்டம் 124க்கும் சம்பந்தமே இல்லை. இந்தியாவிலேயே பத்திரிகையாளர்  ஒருவர் இந்த பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறை. இந்த வழக்கில் கோபாலை கைது செய்து ரிமாண்ட் செய்ய உத்தரவிட்டால் இது நாட்டுக்கே தவறான  முன்னுதாரணமாகிவிடும். அதற்கு சென்னை நீதிமன்றம் உதாரணமாகிவிடக்கூடாது. பத்திரிகையில் வரும் செய்திகளை வைத்து இந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யமுடியாது’  என்று தனது கருத்துகளை தெரிவித்தார். மேலும், நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு போலீஸ் தரப்பில் இருந்து எந்தவித சரியான பதில்களும் வரவில்லை. இதையடுத்து, வழக்கு குறித்து தீர்ப்பளித்த நீதிபதி, இந்த வழக்கில் நக்கீரன்  கோபால் மீது 124 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி சிறையில் அடைக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார். பின்னர் நக்கீரன் கோபால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் குவிந்து இருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நக்கீரன் கோபாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nakheeran Gopalan ,Nirmaladevi , Nakheeran Gopalan,jailed , case, says Nirmaladevi
× RELATED குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்...